
உள்ளேயும் வெளியேயும் தங்கமாக மின்னிய தலைவர் எம்ஜிஆர்! இவரது பூர்விகம் கேரளா. பிறந்தது இலங்கையில் உள்ள கண்டி. வளர்ந்தது கும்பகோணம். உலகம் போற்றும் மனிதராக உருவா(க்)கியது சென்னை. அதனால்தானோ என்னவோ தனது பூத உடல் இந்த மண்ணில்தான் அமரத்துவம் அடைய வேண்டும் என்று விரும்பினார். அவருக்கும் சென்னைக்குமான தொடர்பு எத்தகையது? சில சம்பவங்களை மட்டும் சொல்லி முடித்துவிட முடியாது. நமது வாசகர்களுக்காக இங்கே கொஞ்சமே கொஞ்சம்...
ஒத்தவாடை தெரு-
கலைஞரும் எம்ஜிஆரும் நண்பர்களாக நடைபழகிய தெரு இது. இங்குதான் எம்ஜிஆர் வீடும் இருந்தது. கலைஞரையும் தனது பிள்ளையாக பாவித்த புரட்சித்தலைவரின் அம்மா சத்யபாமா இருவரையும் ஒன்றாக உட்கார வைத்து தானே சாதத்தை பிசைந்து உருட்டிக் கொடுப்பாராம்.
ராமாவரம் தோட்டம் -
அடிப்படையில் மலையாளிதான் என்றாலும், புரட்சித்தலைவர் விரும்பிக் கொண்டாடியது தமிழர் திருநாளான பொங்கல் திருநாளைதான். இந்த நாளில் திரைத்துறையை சார்ந்த தனது நண்பர்களை அழைத்து இங்குதான் பொங்கலை கோலாகலமாக கொண்டாடுவார்.
அதே மாதிரி புத்தாண்டு தினத்தன்று வருகிற எல்லாருக்கும் தனது கையால் 100 ரூபாய் நோட்டு ஒன்றை வழங்குவாராம். திரையுலகை சார்ந்த எல்லாருமே இந்த நோட்டை வாங்க ராமாவரத்தில் உள்ள அவரது வீட்டின் முன் குவிந்திருக்கிறார்கள். புரட்சி தலைவர் கையால் வாங்கினால் வருடம் முழுவதும் செழிப்பாக இருக்கலாம் என்பது அவர்களது நம்பிக்கை. அப்படி ஒருமுறை வந்த நடிகர் பாலாஜிக்கு ஒரு 100 ரூபாய் தாளுடன், பெட்டி நிறைய கேஷ¨ம் கொடுத்தாராம் எம்.ஜி.ஆர். ஏன்?
எங்கோ ஒரு கிராமம் வழியாக காரில் சென்று கொண்டிருந்தாராம் பாலாஜி. அங்கே மொட்டை வெயிலில் காலில் செருப்பு கூட இல்லாமல் யாரோ ஒரு மூதாட்டி சென்று கொண்டிருக்க, இறக்கப்பட்ட பாலாஜி காரை நிறுத்தி ஒரு 100 ரூபாய் கொடுத்தாராம் மூதாட்டிக்கு. இதுபோல நினைத்துப் பார்க்க முடியாத இன்ப அதிர்ச்சியை கொடுக்கிற ஒரே ஜீவன் எம்ஜிஆர்தானே? நீங்க எம்ஜிஆர்தானே? நல்லாயிருக்கணும் தலைவா என்று அந்த மூதாட்டி வாழ்த்தினாராம். இதைதான் பாலாஜி அப்போது எம்ஜிஆரிடம் சொன்னார்.
என் சார்பில் அந்த மூதாட்டிக்கு உதவியதற்காகதான் இந்த பரிசு என்றுதான் ஒரு பெட்டி நிறைய பணம் கொடுத்தாராம் எம்ஜிஆர். (ஆனால் அதை பாலாஜி வாங்கிக் கொள்ளவில்லை)
எம்ஜிஆரை வெறும் நடிகராகதான் பலர் பார்த்தார்கள். ஆனால் அவர் பெரிய படிப்பாளி என்பதை நிரூபித்த இடம் இதே ராமாவரம் தோட்டம்தான். இங்கே அண்டர் கிரவுண்டில் மிக பிரமாண்டமான நு£லகம் அமைத்திருந்தார் எம்ஜிஆர். இந்த நு£லகத்தை பார்த்து வியந்த அறிவாளிகளில் இன்றைய முதல்வர் கருணாநிதியும் ஒருவர்.
மவுண்ட் ரோடு-
தமிழக முதல்வர்கள் யாருமே மக்கள் முன் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டதில்லை. அந்த பெருமை எம்ஜிஆருக்கு மட்டும்தான். முதன் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட போது, இதே மவுண்ட் ரோடில் அண்ணாசிலைக்கு அருகே பிரமாண்டமான மேடை அமைத்து பொதுமக்கள் முன்னிலையில்தான் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார் புரட்சித்தலைவர்.
லாயிட்ஸ் சாலை-
இன்றைய அதிமுக வின் தலைமை அலுவலகம் இருக்கிறதே, அது ஒரு காலத்தில் எம்ஜிஆர் வாழ்ந்த வீடு. அவர் திரைத்துறையில் சம்பாதித்து வாங்கிய முதல் சொத்தும் இதுதான். இவர் வாங்கி வைத்திருக்கும் மற்ற பங்களாக்களில் டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிடும் எம்ஜிஆர், இங்கு மட்டும் தரையில் அமர்ந்துதான் சாப்பிடுவார். ஏனென்றால் இந்த மண் அவரை பொறுத்தவரை ரொம்பவே ஸ்பெஷலானது.
தி.நகர் ஆற்காடு தெரு-
தனது முக்கியமான முடிவுகளை அவர் இங்குதான் எடுப்பார். உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் ஜெயலலிதாவை நடிக்க வைக்க முயன்றார் எம்ஜிஆர். ஆனால் அப்போது உடனிருந்த ஆர்.எம்.வீரப்பன் அதற்கு சம்மதிக்கவில்லை. அதில் நடிக்கவில்லை என்றாலும், நட்பை தொடர்ந்தார் எம்.ஜி.ஆர். ஆனால் திடீரென்று என்ன காரணத்தினாலோ ஜெயலலிதாவுக்கும், எம்ஜிஆருக்குமான தொடர்பு விட்டு போயிருந்தது. முதல்வர் ஆன பின்பு ஒரு விழாவில் கலந்து கொள்ள சென்ற எம்ஜிஆர், அங்கு வாசலில் நின்று வரவேற்பளித்துக் கொண்டிருந்த ஜெ.வை சந்தித்தார். தன்னை வந்து சந்திக்கும்படி கேட்டுக் கொண்டு நேரம் ஒதுக்கிக் கொடுத்த இடம் இதே ஆற்காட் தெரு அலுவலகத்தில்தான். பின்பு முதல்வர் ஆன பின்பும் அரசு சார்ந்த சில முக்கிய முடிவுகளை ஜெ.வுடன் கலந்தாலோசித்ததும் இதே இடத்தில்தான்.
அடையார் சத்யா ஸ்டுடியோ-
தனது அன்னையார் சத்யபாமா அம்மையார் பெயரில் எம்ஜிஆரால் நிறுவப்பட்ட ஸ்டுடியோ இது. திமுக விலிருந்து நீக்கிப்பட்ட நிமிடங்களில் இங்குதான் இருந்தார் எம்ஜிஆர். போனில் தகவலை சொன்ன நாஞ்சில் மனோகரன், "இப்போ என்ன செய்யப் போறீங்க?" என்று பதற்றத்தோடு கேட்க, "பால் பாயாசம் சாப்பிட போகிறேன்" என்று சிரித்துக் கொண்டே பதில் சொன்னார் எம்ஜிஆர். புதிய கட்சி என்ற முடிவை எடுத்ததும் இதே ஸ்டுடியோவில் வைத்துதான்.
மீனம்பாக்கம்-
அமெரிக்காவில் உள்ள புரூக்ளின் மருத்துவமனையில் இருந்து சிங்கம் போல் துள்ளிக்குதித்து சென்னை வந்த புரட்சித்தலைவர், விமான நிலையத்திலிருந்து வெளியே வந்து தன்னை பார்க்க துடித்த லட்சோப லட்சம் மக்களுக்கு தரிசனம் கொடுத்தது இங்கேதான். பின்பு இது திரையரங்குகளில் நியூஸ் ரீலாக காண்பிக்கப்பட்டது. இந்த ஒளிச்சுருளுக்கு பின்னணி பேசியவர் எம்.என்.ராஜம். அவர் பேசிய ஒரு வாசகம் இன்னும் நெஞ்சுக்குள் அப்படியே...
"எம்.ஜி.ஆர், நலமா என்று மக்களை பார்த்து கேட்கிறார். அதற்கு மக்கள், தலைவா... உன் அகம் நலம் என்றால், தென்னகம் நலம்தானய்யா என்று ஆர்ப்பரிக்கிறார்கள்.... !"